Showing posts with label saturn impact. Show all posts
Showing posts with label saturn impact. Show all posts

Sunday, February 24, 2013

சனி நீராடு (Sani Neeraadu) - விளக்கவுரை!

சனி  நீராடு  என்து "செம்மொழிச்சிலேடை",
அதாவது
சொற்களைப்பிரிக்காது படித்தால்)!

"சனி  நீராடு" என்று தமிழ் முன்னோர்கள் கூறியிருக்கின்றனர். பாட்டிகளும் தாய்மார்களும் இதன் பொருள் சனிக்கிழமையன்று நீராட வேண்டுமென்று உரைத்தாலும், சிலேடை இலக்கண நடையின் வழியாக ஒருமொழி-பலபொருள் என்று கூறியிருக்கக்கூடும்.

அதில் சிலவன பின்வருபவனாகவும் இருக்கக்கூடும்!

"சனி நீராடு"  என்று பதம் (சொல்) பிரிக்காமல் செம்மொழிச்சிலேடையாக பார்ப்பின் பின்வரும் கருத்துக்களை உணரலாம்:

1. சனிக்கிழமைகளில் குளிக்க வேண்டும்:

தினமும் குளிப்பது எல்லோருக்கும் நல்லது என்றாலும் சிலர் அதனை செய்ய தவறியிருக்கலாம். அவர்களுக்கு அறிவுறுத்தலாக இருத்தல் கூடும்.

2. சனிக்கிழமைகளில் நன்றாக தேய்த்து குளிக்க வேண்டும்:

தினந்தோறும் குளிப்போர் கூட பணிகளின் நிமித்தமாகவும், நேரமின்மை காரணமாகவும் அவசரத்தின் தூண்டலால் சரியாக குளிக்க தவறலாம். எனவே, அவர்கள் சிறிது கவனம் செலுத்தி நன்றாக குளிப்பதற்க்கு வாரம் ஒரு நாளை ஒதுக்கலாம்.

3. சனிக்கிழமைகளில் நிதானமாக தலைக்கு குளிக்கலாம்:

நீண்ட தலைமுடி கொண்ட பெண்டிரும் சில ஆடவரும் தலை குளிக்க சிறிது காலம் எடுக்கும். அதனால் தினமும் அவர்கள் தலைக்கு குளித்தல் இயலா. எனவே, அப்படியானோர் சனியன்று மட்டும் தலை குளிக்கலாம்.

4. சனிக்கிழமைகளில் மட்டும் தலைக்கு குளிக்கலாம்:

அடிக்கடி தலை குளிப்பின் மிகவும் குளிர்ச்சியாகி சிலர் உடல் உபாதைகளுக்கு ஆளாவார்கள். அவ்வாறானோர் சனியன்று மட்டும் தலை குளிக்கலாம்.

5. சனிக்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்:

நல்லெண்ணெய் தலைக்கு தேய்த்து குளித்தல் மிகவும் நல்லது. பல நற்பலன்களை அளித்திடினும் அதற்கு நிறைய நேரம் ஆகும் காரணத்தால் வார விடுமுறையான சனியன்று மட்டும் குளிக்க அறிவுருத்தியிருக்கலாம்.

6. சனிகளில் குளுமை பேண வேண்டும்:

வாரம் ஐந்து நாட்கள் மிக கடுமையாக உழைத்து உடல் சூட்டை மிகவும் கூட்டிக்கொள்வோர் விடுமுறை நாளான சனியன்று தன் உடல் சூட்டை தணிக்க தலைக்கு எண்ணெய் தேய்த்தோ ஆறு குளங்களில் நீந்தி விளையாடியோ குளுமை காக்கலாம்.

7. சனிகளில் உடல் வலு அதிகரிக்க வேண்டும்:

அன்றும் இன்றும் மக்கள் பணிகளின் காரணத்தால் தினமும் நீந்த இயலாது. எனவே, விடுமுறைகளில் நீராடுங்கள் என்று சூசகமாக நீந்துங்கள் என்று உரைத்திருக்கக்கூடும்.

8. சனி தீங்கு நீங்க கோவில் குளத்தில் குளிக்க வேண்டும்:

சோதிடத்தில் நம்பிக்கையுள்ளோர் தமக்கு சனி திசை நடக்கையில் கோவிலில் நவகிரகங்களுக்கு விளக்கேற்றும் முன் கோவில் குளத்தில் குளிக்கவும் கூறியிருக்கலாம். (குறிப்பு: அக்காலத்தில் கணிதமும் சோதிடமும் ஒன்றாகவும் நன்றாகவும் பார்த்தமையால் சோதிடத்தில் பொய்யும் பித்தலாட்டமும் கிடையா)

9. சனியால் உண்டாகக்கூடிய பிணிகள் நீங்க திருநள்ளாற்றில் முழுக வேண்டும்:

சோதிடத்தில் நம்பிக்கையுள்ளோர் தமக்கு சனி திசை நடக்கையில் திருநள்ளார் சென்று அங்குள்ள குளத்தில் குளித்தால் சனியால் உண்டாகும் பிணிகள் விலகும் என்றும் கூறியிருக்கலாம். 

10. சனியன்று வீட்டை மெழுகேற்று:

இலக்கியங்களில் "நீராடு" என்பதன் மரூஉ "நீராட்டு" என்பதாகும். எனவே, சனியன்று விடுமுறையாதலால் இல்லத்தை நன்றாக பசுஞ்சாணம் கொண்டு மெழுகலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

11. சனியன்று பொருட்களை நீராட்டு:

இல்லத்தை நீராடல் செய்வதோடு மட்டுமின்றி, இல்லத்தில் உள்ள பொருட்களையும் சுற்றி உள்ள தோட்டம் மற்றும் முற்றத்தையும் நன்றாக நீராட்டு எனவும் பொருள் கொள்ளலாம்.

12. விடுமுறையில் சுற்றம் கூடும்:

சனிக்கிழமை என்பது சனிக்கடவுளுக்கு உகந்த நாள் என்றும், அவரது வாகனம் காகம் என்றும் தமிழ் கற்ற நல்லோர் அறிவர். காகம் கரைந்தால் அது நட்பு, உறவு, சுற்றம் வீடு வருவர் என்றும் ஒரு பரவிய நம்பிக்கை  உண்டு. இவை மூட நம்பிக்கைகளாக இருப்பினும், உறவுகள் ஒன்று கூடுவது நன்றென்பதால் விருந்தினரை உபசரிக்க தயாராக இருத்தல் அவசியம். எனவே, சனி நீராடு என்பது சனியன்று வரும் உறவினரை தெளிவுடன் கூடிய முகத்துடனும், நல்ல சுத்தமான உடலுடனும் வரவேற்க குளித்தல் அவசியம் என்று உணரலாம்.

இன்னும் பிற பொருள்களும் இந்த செம்மொழிச்சிலேடையில் ஒளிந்திருக்கக்கூடும்.