Thursday, January 14, 2010

காவலர் முன்பு காதை சொறியலாமா?

மறு நாள் பொங்கல்.

அலுவலக அலுவல்களை முடித்துவிட்டு பொங்கலோ பொங்கல் என்று மனதுக்குள் ஆரவாரத்துடன் வண்டியை செலுத்தினேன். ஒரு இடத்தில் கொஞ்சம் வண்டிகள் கூடுதல் நெரிசல். ஒரு சாலை சந்திப்பில் வண்டிகளை மேற்பார்வையிடும் ஒரு போக்குவரத்து அதிகாரி (வெண்சட்டைக்காவலர்) வண்டிகளை நிறுத்தினார்.
அப்போது பார்த்து என் வலது காது அரித்தது. வலது கையினால் வண்டியை நிறுத்திக்கொண்டே இடது கையை காதிடம் கொண்டு போனேன் - காதை சொறிவதற்கு. இரு விரல்களை மட்டும் ஹெல்மெட்டுக்குள் விட்டு சொறிந்தேன். காவலர் என் கை காதிடம் இருந்ததை பார்த்து விட்டார். உடனே என்னை ஓரம் நிறுத்த கையை அசைத்தார்.

சென்னையில் வண்டி ஓட்டுவதில் நல்ல அனுபவம் உள்ளதால் காவலரை எதிர்கொள்ள தன்னம்பிக்கையோடு ஓரம் கட்டினேன், ஆனால் இயக்கத்தை நிறுத்தவில்லை. ஒரு நிமிடத்திற்குள் முடித்துக்கொள்ளலாம் என்ற நம்பிக்கை. நேரமும் குறைவு. மறுநாள் பொங்க வைக்கணும்.

காவலர்: என்ன தம்பி, மொபைலா? ஓட்டும் போதேவா?

ஓட்டுனர்: இல்ல சார், காது அரித்தது. Happy Pongal!

காவலர்: என்ன சொன்னீங்க?

ஓட்டுனர்: காது அரித்தது, சொறிந்தேன். என்னிடம் hands-free இல்லை.என் காதில் hands-free மாட்டவும் முடியாது. பிடித்துக்கொள்ள காதில் சரியான எலும்பு இல்லை. அப்படியே கால் வந்தாலும் வண்டியை நிறுத்தி விட்டு தான் எடுப்பேன்.

காவலர்: என்ன? போலீஸ் கிட்ட தான் காது அரிக்குமா?

ஓட்டுனர்: காதுக்கு எப்படி சார் இடம், பொருள், ஏவல் தெரியும்! அது போக அரிக்கும் போது  தானே சொறிஞ்சிக்க முடியும். எந்த இடமானாலும் யார் முன்னாடி இருந்தாலும்.

காவலர்: சரி சரி கிளம்புங்க.

ஓட்டுனர்: ஓகே சார்... Happy Pongal!

காவலர்: Happy பொங்கல்!

ஓட்டுனர்: தமிழனுக்கு தமிழன் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்னு  சொல்லணும் சார்.

காவலர்: (லேசாக சிரிப்பையும் முறைப்பையும் கலந்த பார்வையுடன்) பொங்கல் நல்வாழ்த்துக்கள். கிளம்புங்க!


காத்திருந்த வண்டியை முறுக்கியதும் சீறிற்று...



சில எண்ணங்கள் மனதில் ஓடின. அவை இதோ உங்கள் பார்வைக்கு:

(1) ஓட்டும் பொது தயவு செய்து கைபேசியில் பேசாதீர்கள்; hands-free உபயோகிக்காதீர்கள். ஓரிரு வினாடிகளில் வண்டியை ஓரம் கட்டிவிட்டு பேசுங்கள். எந்த அழைப்பு மணியும்  நம் உயிரை விட முக்கியமானதல்ல. யாருக்கு தெரியும்! மறுபக்கத்திலிருந்து அழைப்பது எமனாக கூட இருக்கலாம்!

(2) ஒரு சிலர் செய்யும் தப்புகளால் காவலர்கள் எல்லோரையும் குற்றவாளிகளை போல் சந்தேகப்படுகின்றனர்.

(3) "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது" என்பது போல், மக்களாய் பார்த்து மாறா விட்டால் காவலர் என்ன செய்ய முடியும்?

(4) மக்கள் காவலர் எண்ணிக்கை சமன்பாடில்லை (ratio). இதனால் காவலர்கள் எத்தனை பேரை தான் திருத்த முடியும்? பாவம் அவர்கள்.

(5) சும்மா "சமூகம் சரியில்லை", "நாடு திருந்தாது", என்று புலம்புவதை விட்டுவிட்டு ஒவ்வொருவரும் தனி மனித ஒழுக்கத்தை மீறாமல் நடந்தாலே நாடு செழிக்கும்.

© 2010 - Copyright reserved - Raj 

No comments:

Post a Comment